×

3 நாட்கள் கனமழையின்போது 91 பெண்களுக்கு பிரசவம்: சுகாதார துறையினர் சவாலான பணி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தின்போது மாவட்ட சுகாதார துறையினரின் நடவடிக்கையின் காரணமாக 3 நாட்களில் 91 கர்ப்பிணிகள் பாதுகாப்பான முறையில் குழந்தைகளை பெற்றெடுத்தனர். நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனின் ஆலோசனை பேரில் மழை வெள்ளத்தின்போது கர்ப்பிணியாக உள்ள தாய்மார்கள் எங்கெங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு சிறப்பு கவனம் எடுக்கப்பட்டது. இதில் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளில் டாக்டர்கள் இரண்டு குழுவாக செயல்பட்டனர். மேலும் விடுப்பில் இருந்த டாக்டர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் மாவட்ட முழுவதும் கடந்த 17ம் தேதி முதல் 696 கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டு மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில், சிக்கல் நிறைந்த கர்ப்பிணி தாய்மார்கள் 24 பேர் மீட்கப்பட்டு அம்பை மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில், 13 பேருக்கு குழந்தை பிறந்தது. நெல்லை மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 142 பேர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 18ம் தேதி முதல் 20ம் தேதிவரை 3 நாட்களில் மட்டும் சுமார் 91 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. மழை முழுமையாக குறையும் வரை கர்ப்பிணி தாய்மார்களை தொடர்ந்து கண்காணிக்க நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களையும் அந்த அந்த பகுதியை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post 3 நாட்கள் கனமழையின்போது 91 பெண்களுக்கு பிரசவம்: சுகாதார துறையினர் சவாலான பணி appeared first on Dinakaran.

Tags : Health department ,Nellai ,health ,Dinakaran ,
× RELATED எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி:...